செயற்கை விரலில் USB Drive

“மயூரி” என்று சொல்லும் பொழுது நம் எல்லோருடைய மனதிலும் “சுதா சந்திரன்” தான் சட்டென நினைவுக்கு வருவார். ஒரு திறமை மிக்க நாட்டிய கலைஞர், விபத்துக்குள்ளாகி தனது காலை இழக்க நேரிடுகிறது. பிறகு, ஜெயப்பூரில் தயாரிக்கப்படும் செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டு, நாட்டியம் பழகி திறமையை இன்னொரு முறை சமுதாயத்திற்கு நிரூபிக்கிறார். இது தான் ” மயூரியின் கதை”. கதை என்று ஈரெழுத்துக்களிற் சொன்னாலும், இது சுதாவின் வாழ்வில் நடைபெற்ற உண்மைச் சம்பவம். 1984 இல் இத்திரைப்படம் வெளிவந்த பிறகு தான், நம் சமுதாயத்தில் செயற்கை அங்கங்களைக் குறித்து விழிப்புணர்வு வளரத் தொடங்கியது.
சமுதாயம் ஊனமுற்றவர்களை பாவிகள் போல் பார்ப்பதும், இவர்கள் விதியே என்று மூலையில் முடங்கிக்கிடந்த காலமும் மாறிவிட்டது. எந்தப் பேதமும் இல்லாமல் அவர்கள் எல்லோருடனும், எப்பொழுதும்போல் பழகி வருகிறார்கள். நாமும் அவர்களிடம் வேறு விதமாக ( மனதைப் புண்படுத்தும் விதமாக) பழகுவதில்லை. மக்களிடையே கல்வி அறிவும், தொழில்நுட்பத்தால் இம்மாதிரி நண்பர்களின் வாழ்வை மேம்படுத்த முடியும் என்ற புரிதலும் தான் இந்த மாற்றத்திற்குக் காரணம்.
சமுதாய மாற்றங்களும், மருத்துவத்துறையில் நிகழும் முன்னேற்றங்களும் ஒரு புறம் இருக்க, ஃபின்லாண்டை (Finland) சேர்ந்த ஜெர்ரி ஜலாவா (Jerry Jalava) என்பவர் தனது மருத்துவருடன் கலந்தாலோசித்து (மோதிர) விரலில் USB Drive பொருத்தி உள்ளார். ஒரு நாள் இரவு வேலை முடித்துவிட்டு தனது மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு வரும் வழியில், சாலையைக் கடக்க ஓடி வந்த மானோடு மோதிவிட்டார். மோதிய அதிர்ச்சியில் இவரது தோள் பை (Backpack) பைக்கின் அடியில் மாட்டிக்கொண்டது. தோள் பையின் ஒருபக்கம் இவரது இடது தோளிலும், இன்னொரு பக்கம் மோட்டார்சைக்கிளிலும் சிக்கிக்கொண்டது. இதனால் தன்னை முழுவதுமாக மோட்டார்சைக்கிளிலிருந்து அகற்றிக்கொள்ள முடியாமல் கிட்டதட்ட 58 மீற்றர்கள் அதே நிலையில் சறுக்கி – உருண்டார்.
பிறகு தன்னை ஒருமாதிரி நிதானப்படுத்திக்கொண்டு புகைபிடிக்க சிகிரட்டை எடுக்க முயன்ற ஜெர்ரிக்கு வித்தியாசமான உணர்வு. விபத்தின் வலி ஒருபுறம், என்ன நடந்தது என்று புரியாத குழப்பம் இன்னொருபக்கம். “என்ன செய்வது என்று புரியாமல், அவ்வழியே வருபவர்களின் கவனத்தை ஈர்க்க சிறிது நேரம் அலறிக்கொண்டே இருந்தேன்” என்று ஜெர்ரி தனது வலைப்பதிவில் சொல்லுகிறார். இவர் அலறுவதைக் கேட்டு கரிசனம் காட்டிய நண்பர் அருகே உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றார்.
விபத்தால் உயிருக்கு எந்தச் சேதாரமும் இல்லை, ஆனால் இடது கையில் மோதிரவிரலில் பாதி சிதைந்துவிட்டது. எப்படி முயற்சித்தாலும் இவ்விரலைச் சரிசெய்ய முடியாது என்று மருத்துவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். சிதைந்த பாகத்தை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றும் சொல்லிவிட்டார். சரி, தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சு என்று ஜெர்ரியின் சம்மத்துடன் சிதைந்த பாகம் அகற்றப்பட்டது. இந்த விபத்து நடந்தது 07.05.2008 இல்.
தான் கணனித்துறையில் தொழிலாற்றுபவர் (Software Developer / Concept Designer) என்று சொன்ன பிறகு சிகிச்சை செய்த மருத்துவர், “அப்படியென்றால் உங்கள் விரலிலேயே “finger drive” (Thumb Drive என்று சொல்ல முடியாதல்லவா) பொருத்திக் கொள்ளுங்களேன் என்று வேடிக்கையாய்ச் சொன்னாராம். விஷயம் வேடிக்கையாய் ஆரம்பித்தாலும் ஜெர்ரி இதைக் குறித்து தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார்.
எப்படியும் சிதைந்த பாகத்திற்குச் செயற்கை விரலை ஒட்டவேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தொப்பி மாதிரி பொருந்திக்கொள்ளுவது போல வடிவமைக்கப்பட்ட செயற்கை விரல்தான் சரியாக இருக்கும்.(.. அதாவது.. பட்டம் விடும் பொழுது நூல் – மாஞ்சா விரலை வெட்டாமல் இருக்க ரப்பராலான விரலை பொருத்திக்கொள்வோமே.. அது போல). வேடிக்கையாய் ஆரம்பித்த யோசனைக்கு வடிவம் குடுத்திருக்கிறார் ஜெர்ரி. இப்பொழுது, USB Flash Drive பொருத்திய விரலுடன் வலம் வருகிறார்.
இதில் Micro SD card மூலம் இவர் தேவையான கோப்புகளைச் சேமித்துக்கொள்கிறார். தற்பொழுது Billix , CouchDBX மற்றும் Ajatus அதில் நிறுவியிருக்கிறார். ” இந்த செயற்கை விரல் நிரந்தரமாக என் கையில் ஒட்டப்படவில்லை. நான் எப்பொழுது வேண்டுமானாலும் இதைக் கழற்றி வைக்க முடியும். என் Flash Drive ஐப் பயன்படுத்தும் பொழுது, அதை விரலிலிருந்து கழற்றி, கணனி / மடிக்கணனியில் மாட்டிவிடுவேன். வேலை முடிந்த பிறகு எடுத்து விரலில் மாட்டிக்கொள்வேன்” என்று ஜெர்ரி சொலுகிறார்.
விரல் துண்டிக்கப்பட்டது சங்கடமான நிகழ்வுதான் என்றாலும், அதையும் ஒரு நல்ல வாய்ப்பெனக் கருதிச் செயற்பட்டிருக்கிறார் ஜெர்ரி. Oppurtunity At The Face Of Adversity என்பதை இவருடைய finger – drive என்றும் நமக்கு நினைவுபடுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *