உள்ளங்கையில் உலகம் – கைப்பேசியில் இணையம்

தொழில்நுட்பம் வளர வளர, நம் "தேவை"களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குளிர்சாதனப் பெட்டியும், தொலைக்காட்சிப் பெட்டியும் "வசதி உள்ளவர்கள்" வாங்கும் பொருட்களாக இல்லாமல், " அத்யாவசியம்" என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டது. வீட்டுக்கு ஒரு தொலைபேசி அவசியம் என்றிருந்த காலம் மாறி ஒவ்வொருவருக்கும் கைப்பேசி அவசியம் என்பதும் 'நாம் வாழும் இந்த' காலத்தின் கட்டாயமே என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. இதே வழக்கில் பார்த்தோமேயானால், இணையத்தொடர்பும் நம் வாழ்க்கை முறையும் பின்னி-பிணைந்து உள்ளது. இணையமும் – கைப்பேசியும் இல்லாமல் மக்கள் வாழ்க்கை நடத்தவில்லையா என்று கேட்டால், நாம் அதாவது தனிநபரான நீங்களும் நானும் அந்த வட்டத்துக்குள் இல்லை என்ற எண்ணம் தான் எழுகிறது.

10 வருடங்களுக்கு முன்பாக, வீட்டில் இணையத் தொடர்பை நிறுவ நிறைய யோசித்தோம். அப்பொழுதெல்லாம் வீட்டில் கணனி வாங்குவதே விரயம் என்று பலர் எண்ணினார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. பரிணாம வளர்ச்சி இப்படி இருக்க, இணையத்தொடர்பு நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆங்கிலத்தில் Necessary Evil என்று சொல்லவது இணையத்தொடர்புக்கு மிகச்சரியாக பொருந்தும். தகவல் பரிமாற்ற துறையில் இருப்பவர்கள் இதன் வீர்யத்தை நன்கு அறிவார்கள். இது ஒரு புறம் இருக்க, இணையத்தொடர்பை நிறுவுவது முன்பை விட இன்று மலிவாகத் தான் உள்ளது. நாளுக்கு நாள் இணையப் பயணர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கும் இதுவே காரணமாக்கூட இருக்கலாம்.

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் மின்னணுவியல் சாதனங்களில் கணனியும் கைப்பேசியும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் ஒன்று இல்லை என்றாலும், பல அலுவல்கள் பாதிக்கப்படுவதை நாம் உணர்ந்திருக்கிறோம். இம்மாதிரி நேரங்களில் தான் கைப்பேசியில் இணையதளங்களை பார்வையிடுவதைக் குறித்து பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும் வரும் விளம்பரங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இது நடைமுறைக்கு சரிவருமா? அப்படியானால் 'என் கைப்பேசியில் இதை எவ்வாறு பயன்பாட்டு நிலையில் வைப்பது" போன்ற கேள்விகளுக்கு பதில் தேடுவது தான் இப்பதிவின் நோக்கம்.

கணனியில் இணையத்தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றால், முதலில் நாம் ISP என்று சொல்லப்படும் Internet Service Provider களை கண்டறிந்து சந்தா விவரங்களை தெரிந்துகொள்வோம். உதா:- DataOne, BSNL, Sify போன்றவை. பிறகு இவற்றில் நமக்கு உகந்ததை தேர்வு செய்து, அந்த குறிப்பிட்ட ISP அலுவலகத்தில் விண்ணப்பத்தை குடுத்து, சந்தா தொகையையும் கட்டிவிட்டால், சில தினங்களில் கணனியில் இணையத்தொடர்பை ஏற்படுத்திவிடலாம்.

கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றால், சில விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக, "என்னிடம் Wireless Modem உள்ளது. இதை பயன்படுத்திதான் நான் மடிகணனியில் இணையத்தொடர்பு ஏற்படுத்துகிறேன். ஆகவே, இதே wireless modem த்தை பயன்படுத்தி என் கைப்பேசியிலிருது இணையத்தொடர்பை ஏற்படுத்த முடியுமா?" என்றால் கண்டிப்பாக முடியாது. Modem தான் இணையத்தொடர்பை ஏற்படுத்தும் மூலாதாரம் என்றாலும், கணனி வேறு, கைப்பேசி வேறு. Chalk peice பயன்படுத்தி Slate இல் எழுதலாம், நோட்டுப்புத்தகத்தில் எழுத முடியுமா? நோட்டுபுத்தகத்தில் எழுத பேனா / பென்சில் தான் உகந்தது. கணனியில் பயன்படுத்தும் இணையத்திற்கும், கைப்பேசியில் பயன்படுத்தும் இணையத்திற்கும் இது தான் வித்தியாசம்.

அப்படி என்றால், கைப்பேசியில் எவ்வாறு இணையத்தொடர்பை ஏற்படுத்துவது?. இதற்கான குறிப்புகள் சில.

 1. Mobile phone model : -

  நீங்கள் பயன்படுத்தும் கைப்பேசியில, இணைய பயன்பாட்டுக்கான சாதனங்கள் உள்ளதா என்று தெரிந்துகொள்ளுக்கள். உதா:- கைப்பேசியில் உலாவி / கோப்புகளை படிக்கவும் மற்றும் தரவிறக்கம் – வலையேற்றுவதற்கான வசதி போன்றவை.

 2. Mobile Service Provider :-

  நீங்கள் சந்தாதாரராக இருக்கும் Mobile Service Provider (Airtel, Hutch, vodafone) இடம், கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்தும் அம்சங்கள் உள்ளதா என்று விவரமாக கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். முடிந்தால், நேரில் போய் விசாரிப்பது நல்லது. பல விஷயங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

 3. சந்தா விவரங்கள்

  அடுத்தது, இணையத்தொடர்புக்கான தனிப்பட்ட சந்தா விவரங்களை அவர்களிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள். சில Mobile Service providers, மாதம்/ வாரம் / தினத்திற்கென்று ஒரு தொகை வைத்திருப்பார்கள். நீங்கள் கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்தினாலும், இல்லை என்றாலும், இந்த குறிப்பிட்ட தொகை உங்கள் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். வேறு சில Mobile Service Providers, பயன்பாட்டுக்கு ஏற்ப தொகை செலுத்தினால் போதும் போன்ற திட்டங்களையும் வைத்திருப்பார்கள். ஆகவே அவசரப்படாமல், நிதானமாக எல்லாவற்றையும் கேட்டு, புரிந்துக கொண்டு உங்களுக்கு சரியாக தோன்றும் திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.

 4. Data Download Charges :-

  கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்த மாத சந்தா என்ற தொகையை கட்டினாலும், இணையப்பயன்பாட்டில் இருக்கும் பொழுது, உலாவியில் தரவிறக்கப்படும் பக்கங்களின் அளவை சார்ந்திருக்கும் தொகையை தான் Data Download charges என்று சொல்வார்கள்.

  உதா:- உங்கள் கைப்பேசியில் இணையத்தொடர்புக்கான மாதச்சந்தா 500/- என்று வைத்துக்கொள்வோம். இணையத்தொடர்பு தான் கிடைத்துவிட்டதே! சும்மா இருக்கும் நேரம் எல்லாம் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கிறேன், வலைத்தளங்களை பார்வையிடுகிறேன் என்று தினம் 2-3 மணி நேரம் செலவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த 3 மணி நேரத்தில், நீங்கள் பார்வையிட்டிருக்கும் பக்கங்களின் அளவை பொறுத்து Data Download Charges என்றொரு தொகை கணக்கிடப்படும். மாத கடைசியில் இணயத்தொடர்பு சந்தா 500/ மற்றும் Data Download Chareges 1000/- என்றும் பில் வரும்.

  ஆகவே நீங்கள் தேர்வு செய்திருக்கும் Mobile Service provider இடம், அவர்களின் திட்டத்தில் data download charges உண்டா? அப்படி உண்டு என்றால் அதன் விவரங்கள் போன்றவற்றை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். கைப்பேசியில் இணையத்திலிருந்து பாட்டு / படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்பவர்களுக்கு இந்த Data Download Charges கூரையை தொடும் அளவிற்கு இருக்கும் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்

இவை அனைத்தையும் மனதில் பதியவைத்து உங்கள் Mobile Service Provider ஐ அணுகி விவரங்கள் சேகரித்து நன்கு ஆராய்ந்த பிறகே கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்தவேண்டும் என்பதையே பரிந்துரைக்கிறோம்.

கைப்பேசியில் இணையத்தொடர்பை ஏற்படுத்த முடியுமா? என்றால் முடியும். "கைப்பேசியில் இணையம் தேவை தானா?" என்ற கேள்விக்கு பதில் சொல்ல உங்களால் மட்டும் தான் முடியும். இணையத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்று கணக்கிட துவங்குங்கள், விடை தானாகவே கிடைத்துவிடும்.

-- தீபா கோவிந்த்

Comments

 1. By nivas

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*