Windows Security – நேரமிருந்தால் பாதுகாப்பு நிச்சயம்.

தகவல் தொழில்நுட்பத்துறையினருக்கு மட்டுமே "அத்தியாவசியம்" என்றிருந்த கணனி, இன்று, எல்லா துறையில் இருப்பவர்களுக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. அலுவலகங்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலும், கல்விமையங்களிலும் கணனியின் பங்கை (கற்றுக்கொள்ள மட்டும் அல்ல, பிரயோகிப்பதிலும் கூட) அலட்சியப்படுத்த முடியாது. செலவு செய்து பொருட்களை வாங்கிக்குவித்தால் மட்டும் போதுமா, அவைகளை முறையே பாதுக்காக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உண்டு என்பதை உணர வேண்டும். இது சாதாரண மேசை – நாற்காலியானாலும் சரி, கணனி போன்ற உயர்தர பொருட்களானாலும் சரி.

Microsoft Security Essentials

Genuine Microsoft Operating system, அதாவது மைக்கரோஸாப்ட்டின் சான்றிதழ் பெற்ற Operating System ( xp, Vista, Windows 7) போன்றவற்றை நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், மைக்கரோஸாப்ட் வெளியிட்டிருக்கும் இந்த பாதுக்காப்பு நிரலை கட்டணம் எதுவும் செலுத்தாமலேயே நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம். இதை எப்படி நிறுவ வேண்டும், கோப்புகளை எப்படி சோதிக்க வேண்டும் என்பதை குறும்படம் மூலம் நன்கு விளக்கியுள்ளார்கள்.

AV Comparitives என்ற நிறுவனம், நச்சு நிரல்களிலிருந்து கணனியை பாதுகாக்கப் பயன்படுத்தும் நிரல்களை பரிசோதித்து பார்ப்பதில் தேர்ச்சி பெற்றது. இவர்களின் ஆய்வுப்படி, சோதனையில் பங்குபெற்ற 10 நிரல்களில், மைக்கரோசாப்ட்டின் இந்த பாதுகாப்பு நிரலி, எல்லா விதமான சவால்களையும் கடந்த மூன்று நிரல்களில் ஒன்றாகும்.

கணனியில் நச்சு நிரல் பாதுகாப்பு நிரலை நிறுவவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு (ஒன்றுக்கும் மேற்பட்ட) நச்சு-நிரல் நிரலியை நிறுவக்கூடாது. ஏனென்றால், ஒரு நிரலை சார்ந்த கோப்புகளை இன்னொரு நிரல் நச்சு-பாதித்த கோப்பு என்று தவறாக எண்ணும் சாத்தியம் உண்டு.

ஆகவே, நீங்கள் தற்போது பயன்படுத்தும் நச்சு-நிரல் பாதுகாப்பு நிரலியிலிருந்து மாறுபட்ட நிரலை பயன்படுத்த எண்ணினால், முதலாவதை நீக்கிவிட்டு, புதியதை நிறுவுங்கள்.

Windows FireWall protection


நம் வீடுகளில் கதவு முக்கியமான பங்கு வகிக்கிறது. நமக்கு விருப்பம் உள்ளவர்களை கதவை கடந்துவர அனுமதிக்கிறோம். ஆனாலும், வீட்டை சுற்றி (compund wall) சுவர் / முள் வேலி எழுப்புகிறோம். ஏனென்றால், விருப்பமற்ற/ தேவை இல்லை என்று கருதுவதை எல்லாம், வீட்டு வளாகத்துக்குள் வராமல் தடுப்பது தான் இந்த சுவரின் நோக்கம். இந்த வேலையைத்தான் கணனியில் Firewall செய்கிறது.

Anti-Virus நிரல்கள் (நாம் Scan Now அன்று சொல்லிய பிறகு) நச்சு நிரல் பாதித்த கோப்புகளை கண்டுபிடித்து, அவைகளை நீக்குமாறு நமக்கு பரிந்துரைக்கிறது. ஆனால் Firewall, நச்சு நிரல்களை, கணனியில் தரவிறக்கம் ஆகும் முன்னே நமக்கு எச்சரிக்கை விடுகிறது. ஆகவே தான் இதை வீட்டை சுற்றியிருக்கும் மதிர்ச்சுவருடன் ஒப்பிடுகிறோம்.

உங்கள் கணனியில் உள்ள Start -> Control Panel -> Security Settings, இல் மைக்கரோஸாப்ட் அளித்துள்ள Firewall ளிடம் கோப்புகளை எப்படி கையாளவேண்டும் என்பதை குறிப்பிடலாம். மேற்படி விவரங்களை - Windows XP பயன்படுத்துபவர்கள் / Windows Vista பயன்படுத்துபவர்கள் இங்கே விளக்கப்படத்துடன் பார்க்கலாம்.

Windows Updates :-


சில சமயங்களில் கணனியின் வலது மூலையில், மஞ்சள் நிறத்தில் ஒரு சிறிய பெட்டி வந்து போகும், "Ready to install updates" என்று. சிலர் இதை தொந்தரவாக நினைத்து, "Update Later" என்று சொல்லி, பிறகு மறந்து விடுவார்கள். அந்த நிமிடம் இது தொந்தரவாக தெரிந்தாலும், கணனி பாதுகாப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. முன்-வாசல், பின்-வாசல், மாடிக்கு போகும் வழி, காம்பவுண்ட் சுவரில் இருக்கும் இரும்புக்கதவு என்பதை எல்லாம் சரிபார்த்து பூட்டுவது தொந்தரவாக இருக்கும், ஆகவே இதையெல்லாம் திறந்தே வைக்கிறேன், என்று சொல்வதற்கு சமமாகும் . Windows Updates ஐ புறக்கணித்துவிட்டு, என்னதான் உயர்தர நச்சு-நிரல் பாதுகாப்பு நிரல்களை நிறுவினாலும், சில சதவிகிதம் தான் பாதுகாப்பு பெற முடியும். முழுமையான பாதுகாப்பு பெற, Windows updates ஐ சரியாக கண்காணித்து புதுப்பிப்பது சிறந்தது.

உலாவியுடன் ஒட்டி செயல்படும் தரமான சொருகி-நிரல்களையும் (plug-in) புதுப்பிக்க வேண்டும்


Adobe Acrobat Reader / Adobe Flash player போன்று உலாவியுடன் ஒட்டி செயல்படும் இந்த சொருகி-நிரல்கள் இணைய பயன்பாட்டில் தவிர்க்க முடியாதது. Adobe நிறுவனம் புதிது புதிதாய் வரும் நச்சு-நிரகளிலிருந்து இதன் சொருகி-நிரகளை பாதுகாக்க, வேண்டிய முறைகளை மேம்படுத்தி, நிரல்களை புதுப்பிக்கச் சொல்லி தகவல் விடும். இம்மாதிரி தரமான சொருகி-நிரல்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதும், நச்சு நிரல்களை தரவிறக்கம் ஆகாமல் தவிர்க்க முடியும்.

எச்சரிக்கையுடன் செயல்படுவது


"சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை" என்பது போல், அறிமுகம் இல்லாத தளங்களிலிருந்து / நபர்களிடமிருந்து வரும் சுட்டிகளை / கோப்புகளை தரவிறக்கம் செய்யாதீர்கள். இவைகளை தரவிறக்கம் செய்தே ஆகவேண்டும் என்றால், தனித்தனியாக Anti Virus மூலம் சோதித்து பார்க்கவும். இன்னும் அதிகப்படியாக சோதிக்க வேண்டும் என்றால், Virus Total போன்ற தளத்தில் குறிப்பிட்ட கோப்பை வலையேற்றி, சோதனைச் செய்யவும். இந்த தளம் பல நச்சு-நிரல் பாதுகாப்பு தளங்களுடன் ஒத்து செயல்படுவதால், குறிப்பிட்ட கோப்பின் நம்பகத்தன்மையை விவரமாக பரிசோதிக்கப்படுகிறது.

பள்ளியில் படிக்கும்போது, நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டைப் போடச் சொல்லி வலியுறுத்துவார்கள். பலர் கைப்படும் காரணத்தினால், கையாளும் முறை வேறுபடும். இதனால், குறைந்தது ஒரு வருட காலமாவது, அந்த புத்தகம், பயன்பாட்டு நிலையில் இருக்க வேண்டும் என்பது தான் பள்ளி மற்றும் பெற்றோரின் எண்ணம். அதே மாதிரி, கணனியிலும், கையாளும் முறை மாறுபடும். இணையத்திலிருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்வது, USB-Stick க்கில் கோப்புகளை ஏற்றுவது, பகிர்ந்துகொள்வது, குடும்பத்தில் எல்லோரும் ஒரே கணினியை பயன்படுத்துவது போன்றவை (பலர்) கையாளும் முறைகளாகும். இக்காரணத்தினால், கணனியில் உரிய பாதுகாப்பு முறைகளை கையாள்வது சாலச்சிறந்தது. Spyware, Malware, Adware போன்றவை எம்மாதிரியான விபரீத விளைவுகளைத் தரும் என்று முன் பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இம்மாதிரி பாதுகாப்பு முறைகளை / நிரல்களை பயன்படுத்துவதற்கு அதிகப்படியாக பணம் செலவு செய்ய வேண்டியதில்லை என்பது உபரி தகவல்.

-- தீபா கோவிந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*