Water Water everywhere, but not a drop to drink ” (எல்லா இடத்திலும் நீர் ஆனால் குடிப்பதற்கில்லை ஒரு சொட்டு) என்று புகழ்பெற்ற கவிஞர் Samuel T Coleridge எழுதிய The Rime of the Ancient Mariner கவிதையில் வரும். சீற்றம் நிறைந்த கடலில் மாலுமியும் அவரது பணியாட்களும் நீண்ட காலம் பிராயணம் செய்கிறார்கள். கரை சேர்ந்த பொழுது தேக்கிவைத்த குடிநீர் எல்லாம் இப்பொழுது செலவாகிவிட்டது என்றும், சுற்றும் தண்ணீரால் (கடலால்) சூழ்ந்திருந்த போதிலும், தன் சகாக்களுக்கும் பணியாட்களுக்கும் தாகத்தை தீர்க்க ஒரு சொட்டு தண்ணீர் (குடிக்க தகுதியான நீர்) கூட கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்.
ஜென்ம விரோதியே தாகம் என்று சொல்லும் பொழுது, சற்றும் தயங்காமல் மோர் குடுக்கவேண்டும் என்ற மனம் கொண்டவர்கள் தான் நம்மில் பலரும். இப்படி விரோதத்ததை அகற்றி, தீங்கு செய்தவர் என்பதையும் மறந்து மனிதாபிமான அடிப்படையில் செயல் படும் நாம், நம் வருங்கால சந்ததியினர்களுக்கு நம்மையும் அறியாமல் எவ்வளவு பெரிய துரோகத்தை செய்கிறோம் என்று தெரியுமா? நம் பிள்ளைகளுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் சேரவேண்டிய நிலத்தடி நீரை நாம் கபளீகரம் செய்வது மட்டுமல்லாமல், பொறுப்பில்லாமல் அவற்றை விரயம் செய்துகொண்டு இருக்கிறோம்.
பூமியில் 70% நீரால் நிரம்பி இருக்கிறது என்று சான்றுகள் சொல்கின்றன. நம் உடம்பில் 60% நீர், மீதி இருக்கும் 40% தான் ரத்தம், காற்று, மாமிசம் போன்றவைகளுக்கு. ரிதம் திரைப்படப் பாடலில் வருவது போல் தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம், தண்ணீர் கரையில் முடிக்கிறோம், ஒவ்வொரு கட்டத்தில் நம் வாழ்வில் தண்ணீர் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதை மனதளவில் ஒப்புக்கொள்ளும் நாம், அன்றாட வாழ்வில் 40% கும் மேல் தண்ணீரை விரயம் செய்கிறோம் என்பதை உணர்வதில்லை.
தொடர்ந்து விவசாய நிலங்களில் அடுக்கு மாடி கட்டிடங்கள் வந்ததாலும், மரங்களை வளர்க்காமல், இருக்கும் வனங்களை குடியிருப்புகளாக மாற்றிவந்ததின் காரணமாகவும், நிலத்தடி நீ ரின் மட்டம் (Ground water table) கடந்த 20 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துவிட்டது என்று தெரியவந்துள்ளன. 1980′ s இல் சென்னை புறநகர் பகுதிகளில் 8 அடி குழித்தாலே நீர் ஊற்றெடுக்கும். ஆனால் இப்பொழுதோ, 15 அடி தோண்டி, பாறைகளை மருந்து வைத்து உடைத்தாலும் நீர் ஊற்றெடுப்பதில்லை. ஏரி, குளம் எல்லாம் வற்றிக்கொண்டே வருகிறதாம். நிலத்தடி நீரின் மட்டம் குறைந்து வருவதற்கு முக்கிய காரணம், மழை நீரின் பெரும் அளவு நிலத்தை வந்தடையாமல், கடலுக்குள் போய் சேருவது தான் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
இது பொதுப்படையான பிரச்சனை, நானோ தனிமனிதன், என்னால் என்ன செய்யமுடியும் என்று எண்ணாதீர்கள். “இராமருக்கு உதவிய அணில்” போல், ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட முயற்சியும் நிலத்தின் நீர் மட்டத்தை உயர்த்த உதவும். இந்த திசையில் நம்மால் செய்யக்கூடியது தான் மழை நீர் சேகரிப்பு.
நகரமயமாக்குதல் (Urbanisation) காரணமாக பெருகி வரும் அடுக்கு மாடிக் கட்டிடங்களும், சிமெண்ட் தரைகளும், மணல் – தரைகளை நம் நினைவுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. 2 – 3 தலைமுறைகளுக்கு பிறகு, “மணல் தரையா? அப்படி என்றால் என்ன? , சிமெண்ட் இல்லாத தரைகளும் இருந்தனவா?” என்று பிள்ளைகள் கேட்டால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இப்படி மண்ணை மறந்ததன் விளைவு தான் நிலத்தடி நீர் மட்டம் குறையக் காரணம். வீடுகளில், கட்டிடங்களில் பெய்யும் மழை நீரை மண்ணை நோக்கி திசைதிருப்புவதும், மழைநீரை மீள்-பயன்பாட்டிற்கு ஏற்ப சுத்தம் செய்து சேகரிப்பதும் தான் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தின் குறிக்கோள்.
மழை நீரை சேமிப்பதால் மட்டும் நம் கடமை முடிந்து விடுவதில்லை. நீரை விரயம் செய்யாமல் இருப்பதும் நம் கடமையே. முன்பெல்லாம், காசை நீர் போல் செலவழிக்கிறார் என்று சொல்வார்கள். இப்பொழுதோ நீரை காசு குடுத்து வாங்கும் நிலமைக்கு வந்துவிட்டோம். அலட்சியத்தினால் தான் இத்தகைய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம் என்பது என் கருத்து. காசை செலவழிக்கும் பொழுது ஒன்றுக்கு இரெண்டு முறை “இது தேவையா, வீண் செலவா ?” என்று யோசிப்போம் ஆனால் நீரை விரயம் செய்கிறோமா என்று ஒரு முறையாவது யோசித்தது உண்டா?
குழாயை சரியாக மூடாமல், சொட்டு சொட்டாய் பல குடம் நீர் விரயமாகிறது. கை – கால் – முகம் கழுவ சில குவளை நீரே போதுமானது, முழு நேரமும் குழாயிலிருந்து நீரை ஓட விடுவதால் விரயமாவது 2 குடம் நீர். சமயலறையிலிருந்து வெளியேறும் நீரை தோட்டத்திற்க்கு திசை திருப்பாமல், குழாய் நீரை பயன்படுத்துவது விரயம் தானே. இதை தனி வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்பளிலும் சற்றே முன்யோசனையுடன் இருந்தால் செயல்படுத்தலாம்.
அரசாங்கம் உத்தரவு செய்தால் மட்டுமே தான் நாங்கள் இதையெல்லாம் செய்வோம், என்று விவாதம் செய்யாமல், ஒவ்வொரு குடியிருப்பிலும் நீர் சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று இனி பிறக்கப்போகும் சந்ததியினர் உங்களிடம் மானசீகமாய் கேட்கிறார்கள் என்று நினைத்து செயல்படுங்கள். இது நம் எல்லோருடைய தார்மீக கடமையும் கூட.