இதயம்”, வயதுக்கு ஏற்ப வித விதவிதமான எண்ணங்களை நம்முள் வரச் செய்யும் உறுப்பு. காதலர்களுக்குக் கிளர்ச்சியையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கொழுப்பையும் (Cholesterol) நினைவுப்படுத்தும். துக்கம் நெஞ்சை அடைக்கும் பொழுது, “இதயம் வெடித்து விடும்போல உள்ளதே” என்று புலம்பச் செய்வதும் இதுவே. இப்படி வெறும் இரத்தமும் சதையும் கொண்ட இந்த உறுப்பு நம்மை எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கிறது. ஆனால், நெஞ்சுக் கூட்டுக்குள் “பத்திரமாக” இருக்க வேண்டிய இதயம், “உடலுக்கு வெளியே” உள்ளபடி இருந்தால் எப்படி இருக்கும்? ஆமாம், பீகாரில், அரசாங்க மருத்துவமனையில், கூலி வேலை செய்யும் மாஜி-விபா தம்பதிக்கு, ஓர் அழகான ஆண் குழந்தை 26 Aug 09 இல் பிறந்தது. இந்தக் குழந்தைக்கு இதயம் உடலுக்கு வெளியே (நெஞ்சுக்கு மேலே) இருந்தது . தட்டச்சு பிழை எதுவும் இல்லை, நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். இந்தக் குழந்தைக்கு இதயம் உடலுக்கு வெளியே இருந்தது.
இந்த நிலை மருத்துவத்தில் Ectopia Cordis என்று சொல்லப்படுகிறது. அதாவது, தோலுக்கு வெளியே உறுப்பு உருவாவது என்ற குறைபாட்டுக்களில் ஒன்றுதான் இது. Ectopia Cordis – தோலுக்கு வெளியே உருவாகியிருக்கும் இதயம். இந்தக் குறைபாடு கோடியில் 3 குழந்தைகளுக்குத் தான் ஏற்படும் என்று ஆய்வுகளின்படி தெரியவந்துள்ளது. கருவில் இதயம் முழுவதுமாக வளரும் முன்னே நெஞ்சுக்கூடு ஒட்டிக்கொள்வதுதான் மூல காரணம் என்று மருத்துவப் புத்தகங்கள் சொல்கின்றன. இப்படி ஆவதால், இதயம் மட்டுமல்ல, சில பிள்ளைகளுக்கு நுரையீரல் போன்ற உறுப்புகளும் தோலுக்கு வெளியே வளருவதுண்டாம். முக்கிய உறுப்புகள் இப்படி தோலுக்கு வெளியே வளர்வதால், அவ்வுறுப்புகளுக்குச் சரியான பாதுகாப்புக் கிடைப்பதில்லை. இதனால் மேற்கொண்டு வரும் மருத்துவச் சிக்கல்கள் பல. அதனால் இம்மாதிரி குறைபாடுகள் இருக்கும் சிசு பெரும்பாலும் இறந்தே பிறக்கும் அல்லது, சில மணி நேரங்கள் மட்டுமே தான் உயிருடன் இருக்குமாம்.
ஆனால், இந்த பீகார் – பாப்பாவுக்கு ஆயுள் கெட்டி. (இந்தப் பாப்பாவுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை). ஏதோ ஒரு குக்கிராமத்தில், அடிப்படை வசதிகளுக்கே திண்டாடும் மருத்துவமனையில் பிறந்த இந்தச் சிசுவை அங்கே சிகிச்சை செய்ய முடியாது என்பதால், தில்லிக்குக் கொண்டு செல்லச் சொல்லிவிட்டார்கள். இயற்கையாகவே இந்தப் பாப்பாவின் இதயத்திற்குப் பாதுகாப்பு இல்லை (நெஞ்சுக்கூட்டுக்கு வெளியே அல்லவா இதயம் இருக்கிறது). சாதாரணத் துண்டின் பலத்தை நம்பி, 3 நாள் குழந்தையை சுற்றிக்கொண்டு, ரயிலில் unreserved compartment ல் தில்லியில் உள்ள AIIMS (All India Institute of Medical Science) க்கு வந்தார்கள்.
குழந்தையை பார்த்த AIIMS மருத்துவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. உடனே குழந்தையை isolation ward இல் வைத்து கண்காணிக்கத் தொடங்கினார்கள். மற்றப் பிள்ளைகளை விட இந்தக் குழந்தைக்கு infection வரும் சாத்தியம் அதிகம். X- Ray எடுத்துப் பார்த்ததில், இந்தப் பாப்பாவின் நெஞ்சுக்கூட்டில் இதயத்துக்கான இடமே இல்லை என்று காண்பித்தது. இதற்கு ஒரே வழி, அறுவைச் சிகிச்சை மூலம் நெஞ்சுக்கூட்டில் (இதயத்தின் இடத்தை ஆக்கிரமத்திருக்கும்) உறுப்புகளை ஒதுக்கி, இதயத்துக்கென தனி இடத்தை அமைக்கவேண்டும். பிற்பாடு, வெளியே தொங்கும் இதயத்தை இந்த இடத்தில் பொருத்த வேண்டும். இப்படிப் செய்யும் பொழுது மற்றத் தசைகளுக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அழுத்தமும், பாதிப்பும் ஏற்படாத வகையில் செய்யவேண்டும்.
இவை அனைத்தும் பிறந்து 10 நாட்களே ஆன – சில அங்குலங்கள் மட்டுமே வளர்ந்த குழந்தையின் உடலில் செய்யவேண்டும். பிள்ளையார் சுழியிலிருந்து – சுபம் வரை ஒரே சிக்கல்.
ஆனாலும் மனம் தளராமல், கைதேர்ந்த 13 மருத்துவர்கள் 4 மணி நேரம் இந்தக் குழந்தையின் ஒவ்வோர் அசைவயும் கண்காணித்து 5 Spet 09 இல் வெற்றிகரமாய் இந்த அறுவைச் சிகிச்சையை நடத்தினார்கள். இந்த சீக்குப்பிள்ளையை ரயிலின் unresrved compartment இல் எந்த வித ‘பாதுகாப்பும்’ இல்லாமல் கொண்டுவந்ததால், வயிற்றுப்போக்கும், infection உம் இருந்ததாம். அதனால், ரத்தம் மாற்று சிகிச்சையும் Blood Transfusion கூடவே நடைபெற்றது. இப்பொழுது பீகார்-பாப்பாவின் உடல் நிலையில் அறுவை சிகிச்சையின் வீரியம் குறைந்து நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
திரு.பிஸ்வோய் & திரு. தேகா வின் குழு இக்குழந்தையைத் தவறாமல் கண்காணித்து வருகிறார்கள். சில மணி நேரங்கள் மட்டுமே வாழ வகைசெய்யும் இக்குறைபாட்டுடன், இந்த பிள்ளை 10 நாட்கள் வாழ்ந்தது முதல் அதிசயம் என்றும், அறுவைச் சிகிச்சைக்கு பிறகு எதிர்பார்த்த விதத்தில் முன்னேற்றம் தெரிவது இரண்டாவது அதிசயம் என்றும் கூறுகிறார்கள். பீகாரிலிருந்து தில்லி வருவதற்குத் தேவையான பண உதவியைச் செய்த கிராமத்து மருத்துவரை மாஜியும் விபாவும் நன்றியுடன் நினைவுகூறுகிறார்கள்.
சாதாரண கூலி வேலை செய்யும் இந்தத் தம்பதிக்கு பீகாரிலிருந்து ரயில் ஏறும் பொழுது தெரியாது, இந்தப் பிள்ளை பிழைக்குமா பிழைக்காதா என்று. தக்க நேரத்தில் ஊக்கமும் பண உதவியும் செய்த கிராமத்து மருத்துவரும், மருத்துவ உதவிகளைச் செய்து வரும் AIIMS குழுவின் கூட்டு முயற்சியாலும், பீகார்-பாப்பா பிழைத்துத் தேறி வருகிறது. எல்லோரும் இந்தக் குழந்தையை அதிசயபாப்பா என்று சொல்கிறார்கள்.