சந்தைக்குப் போகணும், காசு குடு; ஆத்தா வைய்யும்”, என்று பறட்டையிடம் கெஞ்சும் சப்பாணியின் குரலை யாரும் மறந்திருக்க முடியாது. வாரம் ஒரு முறை கூடும் சந்தையில் என்னவெல்லாம் வாங்கவேண்டும் என்று வாரம் முழுவதும் பட்டியலிட்டு, சிறுகச் சிறுகச் சேமித்து, காசைக் கடைக்காரரிடம் கைமாறும் முன்னே, நூறு முறை எச்சில் தொட்டு எண்ணிய பிறகே கொடுப்பது என்று இருந்தது அந்தக் காலம்.
காலச் சக்கிரம் சுழல, பணப் புழக்கமும், அதன் பரிமாணங்களும் மாறின. இன்று வர்த்தகங்களின் பெரும் பகுதி Card Transaction இல் நடைபெறுகிறது. சொல்லப்போனால், “மால்” என்று சொல்லப்படும் அடுக்குமாடிக் கடைகளிலும் – பெட்ரோல் பங்கிலும் தான் Card Transactions அதிகப்படியாக நடக்கிறது. மிகமிகத் தேவையான அளவு காசை வைத்துக்கொண்டு மற்றதை இம்மாதிரி Card Transaction செய்வது வசதி மட்டுமில்லை, பாதுகாப்பானதும் கூட என்று சொல்லலாம். கடன் அட்டைப் பாதுகாப்பு – சில ஆலோசனைகள் என்னும் பதிவில் மேற்படி விவரங்களைக் காணலாம்.
‘மால்’கள் வந்த புதிதில், போக்குவரத்து நெரிசல்களையும் கூடப் பொருட்படுத்தாமல் எல்லோரும் வந்தவண்ணம் இருந்தார்கள். இவைகளின் புதுமை குறைந்த பிறகு ‘மாலுக்கா?” என்று சலிப்புத் தட்டிவிடுகிறது. பெட்ரோல் விலை உயர்வும், வீட்டில் இருந்தபடியே “ஷாப்பிங்க்” செய்யக்கூடிய வசதியை இணையம் நமக்கு அளித்ததும், ‘மால்’-வரவுகள் குறைய முக்கிய காரணங்கள்.
Online Shopping என்று சொல்லப்படும் இணையச் சந்தைத் தளங்கள், இருந்த இடத்திலிருந்தே பொருட்களைக் காணவும், வாங்குவதற்கும் வசதியாகச் செயற்படுகிறது. கூட்ட நெரிசல்களையும், போய்வரும் எரிபொருட் செலவையும், உபரியாய் வரும் ஹோட்டல், சினிமா, சாப்பாடு, பார்க்கிங் செலவுகளையும் கணிசமாய்க் குறைக்கிறது. ஆனால், இதிலும் ஆபத்துக்கள் இல்லாமல் இல்லை. கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் செயற்பட்டால் இந்த Online Shopping முறையை உங்கள் ஆதாயத்திற்குப் பயன்படுத்தலாம்.
- தகவல் திருட்டு :
- Pop Up blocker:
- HTTPS தளம் :
- விளம்பரங்ளில் உள்ள விலையும், நீங்கள் கட்ட வேண்டிய தொகையும் மாறுபடும். : –
- சுய கட்டுப்பாடு:-
உங்கள் கணனியில் Anti-Virus/Anti-Spy போன்ற நிரல்கள் நிறுவப்படவில்லை என்றால், எக்காரணம் கொண்டும் இணையச் சந்தைத் தளங்களில் பயணர் கணக்கு உருவாக்குவதைத் தவிர்க்கவும். பல தளங்களில் பயணர் கணக்கு இல்லாமலே உலா வரலாம். பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் மட்டுமே பயணர் கணக்கு அவசியம் என்று அறிவித்திருப்பார்கள். (நச்சு நிரல் பாதுகாப்பு என்னும் பதிவில் மேற்படி விவரங்களைக் காணலாம்.)
கிட்டதட்ட எல்லாச் சந்தைத் தளங்களிலும் விளம்பரங்கள் தனிப்பட்ட சாளரங்களாக(Pop up windows) தாமாகவே திறந்து கொள்ளும். இதைத் தடுக்க உங்கள் இணைய உலாவியில் Pop Up Blocker ஐ செயற்பாட்டு நிலையில் வைக்கவும். இம்மாதிரி வரும் சாளரங்களில் சொடுக்குவதும், மின் அஞ்சல் முகவரிகளைக் கொடுப்பதையும் தவிர்க்கவும்.உங்கள் உலாவியைப் பொறுத்து, Pop up blocker ஐ செயல்பாட்டு நிலைக்குக் கொண்டுவரும் முறை மாறுபடும்.
i. Fire Fox பயன்படுத்துபவர்கள் இங்கே காண்க
ii. Internet Explorer பயன்படுத்துபவர்கள் இங்கே காண்க
iii. Safari பயன்படுத்துபவர்கள் இங்கே காண்க
iv. Opera பயன்படுத்துபவர்கள் இங்கே காண்க
வர்த்தகத் தளங்களில் பணம் புழங்குவதால், HTTPS என்ற முகவரியுடன் தான் தள முகவரி தொடங்கும். இப்படி இருந்தால், இத்தளத்தில் வர்த்தகம் செய்யப் பாதுகாப்பானது என்று குறிக்கும். HTTP என்று மட்டும் இருந்தால், எக்காரணம் கொண்டும் உங்கள் Credit Card / வங்கி கணக்கு விவரங்களைக் கொடுக்காதீர்கள். (அந்தரங்கத் தகவல்களைத் திருடும் Malware என்னும் பதிவில் மேற்படி விவரங்களைக் காணலாம்)
கடைக்குச் சென்று பொருள் வாங்கும்பொழுது, பொருள் மேல் போட்டிருக்கும் விலை (MRP) ஐக் கவனிப்பது வழக்கம். சில பொருட்களுக்கு, VAT / Service Tax போன்ற வரியையும் கூட்டிச்சேர்த்துச் சொல்வார்கள் (குறைந்த பட்சம் 5ரூ), நாமும் அந்தத் தொகையைச் செலுத்திப் பொருளை வாங்குவோம். ஆனால், இணையத்தில் இயங்கும் சந்தைத் தளங்களில், பொருளுக்கென்று ஒரு விலை , பிறகு அதை உங்கள் முவரிக்கு அனுப்பி வைக்க இன்னொரு தொகை (Shipping – Handling charges) என அறவிடப்படும். சில தளங்களில் பொருளின் எடைக்கு ஏற்ப Shipping charges மாறுபடும். இவை அனைத்தையும் சரிவர ஆராய்ச்சி செய்த பிறகு வாங்குவது தான் விவேகம். அத்துடன், பொருட்களைத் திருப்பிக் கொடுக்கும் முறையையும் (Return – Refund Policy) அறிந்து கொள்ளுங்கள்.
விரல் நுனியில் எல்லாம் கிடைக்கிறது என்று, தளத்தில் போன மாத்திரத்தில் வாங்குவது முட்டாள்தனம். சிறிய தொகைக்கு ஒரு பொருளை வாங்கி, அது சரியாக உங்கள் விலாசத்திற்கு சொன்ன திகதியில், எந்தக் குறைபாடும் இல்லாமல் வந்து சேர்கிறதா என்று சோதித்துப் பாருங்கள். சந்தைத் தளங்களில் உங்கள் Credit Card / Debit Card விவரங்களைக் கொடுப்பதைத் தவிர்க்க முடியாது என்பதால், பொதுக் கணனிகளில் அதாவது Cyber Cafe போன்று பலர் பயன்படுத்தும் கணனிகளில் ஷாப்பிங்க் செய்வதைத் தவிர்க்கவும். இம்மாதிரி கணனிகளில் தனிப்பட்ட நிரல்கள் நிறுவப்பட்டிருக்கும். இவை சந்தைத் தளங்களில் நீங்கள் Credit Card மற்றும் வீட்டு முகவரி போன்ற விவரங்களை வழங்கும் பொழுது, உங்கள் கவனம் இல்லாமலே பிரதி எடுத்துக்கொள்ளும். இம்மாதிரி பிரதி எடுக்கப்பட்ட தகவல்களை யார் எப்படி பயன்படுத்தினாலும் நஷ்டம் உங்களுக்குத் தான்.
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, கோழிக்குஞ்சு வந்ததுன்னு,
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு, பூனைக்குஞ்சு சொன்னதுண்டு!
கதையிலதானே, இப்போ, காணுது பூமி.
இது மட்டும்தானா, இன்னும், இருக்குது சாமி.
என்று சப்பாணியும் மயிலும் பாடிக்கோண்டே சந்தைக்குப் போனார்கள். இன்று இதே பாடலை இருந்த இடத்திலிருந்து கேட்டுக்கொண்டே நாம் இணையதள சந்தைகளில் உலா வருகிறோம். சந்தைக்குச் செல்லும் பெண்கள் சுருக்குப்பையை அடிக்கடி தொட்டுப்பார்ப்பது போல், தகவல் திருட்டுக்கு சாத்தியங்கள் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். இணையதளச் சந்தைகளில் கொடுக்கல் வாங்கல்களில் உள்ள நுணுக்கங்கள் பற்றியும், அடிப்படை எச்சரிக்கை முறைகளையும் நினைவில் வைத்துக்கொண்டால், ‘மால்’களில் AC- காற்று வாங்கி, சுற்றி வருவது போல், இங்கும் உல்லாசமாகச் சுற்றி பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.