பஞ்சபூதம் என்று நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்றவையை குறிப்பிடுகிறோம். இவைகளைப் போலவே நம்முள் இயங்கும் சுவைக்கும் நாக்கு, நுகரும் மூக்கு, பார்க்கும் கண்கள், கேட்கும் காதுகள், உணரும் சருமம் போன்றவைகளை பஞ்சேந்திரியங்கள் என்று சொல்கிறோம். ஒவ்வொருவரின் பஞ்சேந்திரியங்களும் அவற்றைச் சுற்றி இருக்கும் பஞ்சபூதங்களுடன் இயைந்து செயல்படுகின்றன. நம் அன்றாட வாழ்வின் சம்பவங்களும் இவற்றின் விளைவுகளே என்பதும் மறுக்க முடியாத உண்மை. பஞ்சேந்திரியம், பஞ்சபூதம் என்று ஆன்மீகச் சொற்ப்பொழிவுகளில் பரவலாகப் பயன்படுத்தபடும் சொற்கள்(கணனி) தொழில்நுட்பப் பகுதியில் ஏன் இடம்பெற்றுள்ளது என்று நீங்கள் குழம்பிப்போயிருந்தால் வியப்புஇல்லை .
இந்நாள் வரை கணனியம் (Computing.. not necessarily directly refer to computer) சார்ந்த எல்லாச் செயல்பாடுகள் நடைபெறும் டிஜிட்டல் உலகும், நாம் சுவாசிக்கும் (அதாவது பஞ்சேந்திரியங்களுடன் உறவாடும்) “நிஜ” உலகும் தனிதனியே இயங்குகின்றன. டிஜிட்டல் முறையில் தகவல்களை (கணனி)திரையிலும், அன்றாட வாழ்வில் காகிதங்களிலும், நாம் பார்க்கும் காட்சிகளிலும், படிக்கும் புத்தகங்களிலும், ஸ்பரிசிக்கும் பொருட்களிலும் தகவல்கள் குவிந்துகிடக்கின்றன. இவ்விரு உலகிற்கும் இடைவெளி நாளுக்கு நாள் குறைந்துகொண்டு தான் வருகிறது. Pocket PC / Blackberry / iPhone போன்றவை தற்போதைய உதாரணங்கள்.
இவ்விரு உலகின் இடைவெளியை இன்னும் குறுகச்செய்கிறது பிரணவ் மிஸ்திரியின் ஆறாம்-அறிவு தொழில்நுட்பம் (6th sense Technology). மனிதன் என்றைக்குமே நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்வது மட்டும் அல்லாமல், இந்த உணர்வின் அடிப்படையில் சில முடிவுகளையும் எடுக்கிறான். எந்நேரமும் கணனி முன்னால் இருந்தால் நமக்கே உரிய உணரும் திறனை மெல்ல மெல்ல இழக்க நேரிடுகிறது. கணனியை விட்டு காலார நடந்து வரலாம் என்று பூங்காவிற்குப் போனால், அடடா எவ்வளவு ரம்யமான காட்சி, டிஜிடல் கேமராவில் பதிவு செய்யலாமே என்ற எண்ணம் தோன்றிய கணமே, அதே காட்சியை உணர்ந்து ரசிப்பதை விடுத்து டிஜிட்டல் உலகில் நுழைந்துவிடுகிறான். ஆனால் அதே காட்சியை பாரதிராஜா மாதிரி கட்டம் கட்டி, கைகளை சொடுக்கினாலே படம் எடுக்கலாம் (கேமராவை வெளியே எடுக்காமல்) என்பது இந்த 6th sense technology யின் சிறிய உதாரணமே.
நீங்கள் பயணத்திற்கு ஆயத்தமாக இருக்கும் பொழுது, தொடருந்து / விமானம் சரியான நேரத்தில் செயல்படுகிறதா என்று தொலைபேசியிலோ அல்லது கணனியிலோ இணையத்தில் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இல்லை. குறிப்பிட்ட பயணபற்றுச் சீட்டை பார்த்த உடனையே, அதில் (தாளில்) உள்ள தகவல்களைக் கண்டறிந்து, அதிகப்படியான விவரங்களை உங்கள் பார்வைக்கு அதே பயணபற்றுச்சீட்டில் தெரியச்செய்யும்.
சோதனை முறையில் இந்தத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த 350$ தான் செலவானது என்று பிரணவ் சொல்கிறார். இதற்கென தனியாக எந்தப் “பொருளையும்” தாயாரிக்கவேண்டியதில்லை என்றும், இப்பொழுது சந்தையில் புழங்கும் பொருட்களில் சில மாற்றங்கள் ஏற்படுத்தினால் மட்டுமே போதுமானது என்றும் சொல்கிறார். இது மட்டும் அல்லாது, இந்தத் தொழில்நுட்பம் (பன்னாட்டு) நிறுவனங்களிலும், தொழில்நுட்பம் மிக்க சோதனை மையங்களிலும் மட்டும் வைப்பதால் யாருக்கும் எந்தப் பயன்பாடும் இருக்காது. ஆகவே இதை கட்டற்ற மென்பொருட்களின் வடிவில் (Open Source / கட்டற்ற மென்பொருள் முறையில்) தர இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இரண்டு சாதாரண Computer Mouse லிருந்து ஆரம்பித்த பிரணவின் ஆராய்ச்சி, காகிதத்தில் எழுதினால் கணனியில் பதிக்கும் 3-D பேனா, சுவரில் சித்திரம் எழுதுவது என்று வளர்ந்து ஐபாட்(Ipod) மாதிரி கழுத்தில் மாட்டிக்கொண்டு (தடை / சுமை இல்லாமல்) சுற்றிவரலாம் என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது. இதை நன்கு ஊக்குவித்து முறையே பயன்படுத்தினால் பல ஆச்சர்யங்களைச் சாத்தியமாக்க முடியும் என்று நம்மால் உணர முடிகிறது. எல்லா நூதன விஷயங்களுக்கும் உள்ளது போல, நல்லது என்று இருந்தால் கெடுதலும் இருக்கத்தானே செய்யும்?
தொழில்நுட்பம் நம்மை ஆக்கிரமிக்கும் இந்த காலகட்டத்தில் இந்தப் புதிய முறை தொழில்நுட்பம் நம்மை இன்னும் இதன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்துவிடாதா என்று நம்மில் பலருக்கும் தோன்றலாம். காலப்போக்கில் மனிதன் சிந்திக்க மறந்துவிடுவான் என்றும், காபி வேண்டுமா – தேநீர் வேண்டுமா என்ற சாதாரண கேள்விக்குக்கூட கணனியம் சார்ந்து செயல்படுவான் என்றும் பலர் அங்கலாய்க்கிறார்கள். ஆதி மனிதன் நெருப்பை தற்செயலாகத்தான் கண்டுபிடித்தான். பிறகு அதை உணவை சமைக்கவும், மிருகங்களின் தாக்குதல்களிருந்து தன்னைப் பாதுக்காத்துக்கொள்ளவும் பயன்படுத்திக்கொண்டான். ஆனால் இன்றோ (ஆதி மனிதனை விட பல ரீதியில் முன்னேறிவிட்டோம் என்று இறுமாப்புக் கொள்ளும் இக்கால மனிதன்), இதே நெருப்பை மற்றவர்களில் வீட்டுக்கூரைகளில் வைத்து நாசச் செயல்களுக்குப் பயன்படுத்துகிறான்.
தொழில்நுட்பமும் இந்தத் தீப்பொறிமாதிரித் தான். கண்டுபிடித்தவரின் நோக்கம் நல்லதாகவே இருந்தாலும், அதைக் கையிலெடுப்பவரின் எண்ணத்தைப் பொறுத்துத்தான் விளைவுகள் அமையும். இதற்காக இம்மாதிரி ஆராய்ச்சிகளே கூடாது என்று சொல்வது, ஆதி மனிதன் முதல் (தீ)பொறியை ஏற்படுத்திய போது அதன்மேல் மற்றொருவன் நீர் தெளித்து அணைப்பது போல் ஆகும். எங்கே! நெருப்பு இல்லாத நூற்றாண்டை சற்றே கற்பனை செய்து பாருங்கள் ! ! !. ஆகவே எந்தத் தொழில்நுட்பத்தையும் குறை கூறாமல், நம் செயலுக்கு நாமே பொறுப்பேற்று – சிந்தித்துச் செயல்படுதே விவேகம்