“மாங்காய்க்குப் புளிப்பே இல்லை, கீரையில் மண் வாடை வருகிறது, மாம்பழத்தில் மருந்தின் சுவை உள்ளது” என்றெல்லாம் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். இவற்றில் சிலதை நாமும் அனுபவித்திருக்கிறோம். கடைக்காரரிடம் காரணம் கேட்டால்,
“விவசாயம் செய்பவர்கள் கண்ட கண்ட மருந்தைத் தெளிக்கிறார்கள், இயற்கை உரம் பயன்படுத்துவதில்லை, அதனால் தான் பழைய சுவை ஏதும் காய் மற்றும் பழங்களுக்கு இருப்பதில்லை” என்று சொல்வார்கள்.
சிந்தித்துப் பார்த்தால் அவர் சொல்வதும் ஓரளவு உண்மை தான். பயிரின் உற்பத்தித் திறனைப் பெருக்க, இரசாயனக் கலவைகளை, பரிந்துரைத்த அளவுக்கும் அதிகமாகவே பயன்படுத்துகிறார்கள். மிகுதியாய் இருக்கும் இந்த இரசாயனக்கூட்டு (அல்லது பூச்சிகளை நாசம் செய்யப் பயன்படுத்தும் உயிர்க்கொல்லி மருந்து), பயிர்கள் மீது தங்கிவிடுகிறது. மேலும் காய்–பழம் போன்றவற்றில் ஊடுருவுகிறது. சந்தைகளில் இவற்றை வாங்கி உண்ணும் பொழுது சுவை குறைந்திருப்பதை உணர்கிறோம்.
உற்பத்தித் திறனைப் பெருக்க கண்-மண் தெரியாமல் மருந்தைப் பயன்படுத்துவது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம், அடிமடியில் கை வைப்பது போல், விஞ்ஞானிகள் பயிரின் மரபணுவில் மாற்றங்கள் ஏற்படுத்துவதில் மும்மரமாகச் செயற்படுகிறார்கள். அதாவது, பூச்சிகள் வருவதால் தானே பூச்சி-மருந்தைப் பயன்படுத்துகிறோம். பயிரே பூச்சியைக் கொல்லும் மருந்தை உற்பத்தி செய்வதாக இருந்தால், மருந்து தேவை இல்லையே. அப்படியானால், பூச்சி-மருந்து பயன்படுத்துவது குறையும், உற்பத்தியும் பெருகும் என்பது அவர்களின் வாதம்.
என்ன, குழப்பமாக உள்ளதா? பூச்சியைக் கொல்வதற்கு சில குறிப்பிட்ட இரசாயனங்கள் தேவை. இவை பொதுவாக தாவரங்களில் இருப்பதில்லை, அப்படியானால் இல்லாத ஒன்றை எப்படி பயிரில் உற்பத்தி செய்விப்பது? இம்மாதிரியான கேள்விகளுக்கு பதில் அளிப்பதுதான் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தால் தயாராகும் GMFood (Genitically Modified food) என்று சொல்லப்படும் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்கள்.
Gene அல்லது மரபணு என்றால் என்ன?
ஒவ்வொரு உயிரியின் தன்மையை அதன் மரபணு (DNA) தான் நிர்ணயிக்கிறது. உதாரணமாக, நம்மில் கருவிழி கறுப்பா – பழுப்பு நிறமா, தோல் மிருதுவாக இருப்பது – தடிமனாக இருப்பது போல, தென்னை மரங்களில் மிக உயரமாகவும் குள்ளமாகவும் வளரும் வகைளை சாதரண மக்கள் “ஒரே இனத்தைச் சேர்ந்தாலும் தனிப்பட்ட தன்மையைக் கொண்டது” என்று சொல்வார்கள். விஞ்ஞான ரீதியாக இவற்றை ” மரபணுவில் உள்ள தனித்தன்மைகள் தான் குட்டை – நெட்டை / நிறங்களில் மாற்றமாக வெள்ளிப்படுகிறது” என்று சொல்லப்படுகிறது.
Genitically Modified / மரபணு மாற்றப்பட்ட .. என்றால் என்ன?
உயரத்தில் இருக்கும் மாங்கனியைப் பறிக்க எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்று கிராமத்துத் தோப்பில் மாங்காய் திருடிச் சாப்பிட்டவர்கள் சொல்வார்கள். ஆனால், கைக்கெட்டும் தூரத்திலேயே பழுத்துத் தொங்கினால், பார்த்துவிட்டு சும்மா இருப்பீர்களா? உயரத்தில் காய்க்கும் மரங்களின் சில நுண்ணிய மரபணு மாற்றங்கள் செய்தால், அடுத்த முறை காய்க்கும் பொழுது நிலத்துக்கு மிக அருகாமையில் காய்க்கும். திருவண்ணாமலை – பாண்டிச்சேரி செல்லும் பாதையில் இருக்கும் மாந்தோப்பில் நீங்கள் படுத்துக்கொண்டேக்கூட காய் பறிக்கலாம். இது ஒரே இனத்தைச் சேர்ந்தவற்றில் ஏற்படுத்திய மரபணு மாற்றம்.
எல்லாவற்றிலும், எல்லாவற்றுக்கும் மரபணு மாற்றம் செய்ய முடியுமா?
Theoritical ஆக முடியும் Practical ஆக யோசித்தால் முடியாது. அதீத கற்பனையுடன் சொல்லலாம் என்றால், நாயின் மரபணுவை முயலுக்குள் இணைத்தால், முயல் நாய் மாதிரி குரைக்கும் என்று எதிர்பார்க்கலாம். தாவரங்களின் மரபணுவை மாட்டுக்குள் இணைத்தால், கொம்பில் பூ பூக்கும் என்று எதிர்பார்க்கலாம். நாம் எதிர்ப்பார்க்காத இன்னும் பல விளைவுகளும் இது தரக்கூடும் என்பது எழுதப்படாத சாசனம். (முயலுக்கு கோரைப்பல் வரலாம், பால் பச்சை நிறத்தில் இருக்கலாம்)
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என்றால் என்ன?
சில பயிர்களை சில கிருமிகள் தான் தாக்கும். இக்கிருமிகளை நாசம் செய்ய சில தனிப்பட்ட இரசாயனம் மிக சிறிய அளவிலேயே போதுமானது. Bacteria என்று சொல்லப்படும் சில நுண்ணுயிர் கிருமிகளில் தாமாகவே இம்மாதிரி இரசாயனங்கள் உற்பத்தியாகின்றன. மரபணு மாற்றுதல் மூலம், Bacteria விலிருந்து இரசாயன உற்பத்திக்குக் காரணமாக இருக்கும் மரபணுவின் பகுதியை வெட்டி எடுத்து, பயிரின் மரபணுவுடன் இணைக்க முடியும். இம்மாதிரி மரபணு மாற்றபட்ட பயிர்களின் விதைகளுக்கு பூச்சிக்கொல்லி இரசாயனத்தை பயிரே உற்பத்தி செய்யும் திறன் வந்துவிடும்
அப்படியானால் பூச்சி மருந்து தேவையில்லை என்று எண்ணலாமா ?
இது இக்கட்டான கேள்வி. ஆம் இல்லை என்று பதில் சொல்ல முடியாது. Theoritical ஆகவும், சில கட்டுப்பாட்டுடன் கூடிய பரிசோதனைத் தளங்களின் (Controlled experiments) மூலமாகவும், பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் விவசாய நிலங்களில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விதைத்தால், மண்ணின் தன்மையுடன், நுண்ணுயிரின் மரபணு எப்படிச் செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்களால் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களைச் சாப்பிடலாமா ?
இம்மாதிரிப் பயிர்களிலிருந்து வரும் தானியங்களிலும் நுண்ணுயிரின் மரபணுவின் அம்சம் சொற்பமாகவே என்றாலும் உள்ளது என்பது நிஜம். இந்த நுண்ணுயிரின் மரபணு இதைச் சாப்பிடுபவரின் (மனிதன், மிருகம், பறவைகள்) மரபணுவுடன் எவ்வாறு ஒத்துப்போகும் என்றும் சொல்ல இயலவில்லை. ஒவ்வாமையினால் (Allergic reaction) மருத்துவக் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
வயலில் மருந்தைத் தெளித்ததாலும், சுகாதாரக் காரணங்களுக்காகவும் சந்தையிலிருந்து வாங்கிய பிறகு, சாப்பிடுவதற்கு முன்பு, பல முறை சுத்தமான நீரில் கழுவியபிறகு பயன்படுத்தவேண்டும் என்பதை நாம் அறிவோம். Topical Application என்று சொல்லப்படும் “ஒரு பொருளின் மேலே புரட்டுவது / பூசுவது / தெளிப்பது” போன்றவற்றுக்கு சுத்தமான நீரில் கழுவுவது ஓரளவு மருந்தின் தன்மையை நம் உடலுக்குள் செல்வதைக் குறைக்கிறது. நுண்ணுயிரின் மரபணு கலக்கப்பட்ட பயிர்களில் இதை எவ்வாறு தவிர்ப்பது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
மரபணு மாற்றப்பட்ட (உணவு) பயிர்களை எவ்வாறு கண்டறிவது?
சுருக்கமாகச் சொன்னால், “முடியாது”. சாதாரண கத்தரிக்காயும், மரபணு மாற்றப்பட முறையில் விளைந்த கத்திரிக்காயையும் பார்வையினால் கண்டறியமுடியாது. சுவையில் வித்தியாசம் உள்ளதா என்று இரண்டையும் தனித்தனியாக சமைத்துச் சாப்பிட்டவர்கள்தான் சொல்லவேண்டும். அதனால், இம்மாதிரி பயிர்களுக்கு முத்திரையிட்டு விநியோகிக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பலர் கோரிக்கை அனுப்பியவண்ணம் உள்ளார்கள்.
மரபணு மாற்றப்பட்ட விதைகளை சாதாரண விவசாய நிலங்களில் பயிரிடலாமா?
இந்த ஆராய்ச்சியின் கருப்பொருளே, இவற்றை சாதாரண விவசாய நிலங்களில் பயிரிடவேண்டும் என்பதுதான். செய்யலாம் என்று ஒரு மக்கள் கூட்டம் சொன்னாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின்படி, ஒரு முறை மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விதைத்துப் பயிரிட்டால், அந்நிலத்தில் சாதாரண விதைகள் விளையாது என்றும், ஒவ்வொரு முறையும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விதைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் சொல்கிறார்கள். இது தொடர்பாக இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பயிரிடுவதால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுமா?
பெரும்பாலான பயிர்களில் சாகுபடி செய்யும்பொழுதே அடுத்த முறைக்கான விதை நமக்குக் கிடைத்துவிடுகிறது. ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இது நிகழ்வதில்லை. ஒவ்வொரு முறையும் விதைகளை பணம் செலுத்தித்தான் பெற வேண்டும். ஆரம்பத்தில், இவற்றைப் பயிரிட குறைவான கட்டணம் போதும் என்று சொல்லும் நிறுவனங்கள், பிற்காலத்தில் கட்டணத்தை உயர்த்தினால், அதைச் செலுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை. இதில் யார் யாரிடமிருந்து விதைகளை வாங்குகிறார்கள் என்பது தான் அந்நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. இதனால் பொருளாதாரம் மட்டும் அல்ல, காலப்போக்கில் அந்நாட்டை விவசாய அடிமைகளாக்கவும் (Agricultural labour) சாத்தியக்கூறு உள்ளதை மற்றவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை.
ஒவ்வொரு மனிதனும் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பது போல், நம் நாடும் மற்றவர்களை அண்டி இருக்கக்கூடாது, என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இம்மாதிரி ஆராய்ச்சிகளுக்கு தம் நாட்டில் வழியும் வசதியும் வரும்வரை, மரபுவழி விவசாயம் செய்வதே மேல் என்பது என் தனிப்பட்ட கருத்து
-தீபா கோவிந்த்